
கோவை துடியலூரில் கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிய பின்னர் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மோதியதில் 3 பேர் பலியானார்கள் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நேற்று மாலை கோவை துடியலூரிலிருந்து கோவை நோக்கி மாருதி ஸ்விப்ட் கார் வேகமாக சென்றது. அதில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(22), முகமது சாகிப்(23) மற்றும் சிவாநந்தா காலனியை சேர்ந்த அஸ்கர் அலி (22) ஆகியோர் இருந்தனர். அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீதி மோதியது.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை துடியலூரை அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு அருகே தனியார் நிறுவனத்தில் பணி முடிந்து கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது பின்னால் கோவை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருந்த மாருதி சிப்ட் கார் மோதியது. இதில் இருசக்கரவாகனத்தில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
இருசக்கர வாகனத்தின் மீதூ மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பினை தாண்டி எதிர் சாலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது நேருக்கு நேர் பயங்கமாக மோதியது. இதில் கார் பேருந்தின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொருங்கியது.
இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் காரில் இருந்து மீட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டியை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.
விபத்து குறித்து துடியலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் பொதுமக்களில் பலபேர் மீட்ட்பு பணியில் ஈடுபட்டாலும் பெரும்பாலோனர் தங்களது செல்போன்களில் படம் எடுப்பதிலேயே மும்மூரமாக இருந்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. காரில் வந்தவர்களின் அதிவேகமே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.