நடுரோட்டில் தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் மரணம் - தாம்பரத்தில் பரபரப்பு

First Published Oct 13, 2016, 10:15 PM IST
Highlights


தாம்பரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்து நடுரோட்டில் திடீரென தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தாம்பரம் கடப்பேரி மவுலானா நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் சற்குணம் (31). அ.தி.மு.க. தொண்டர். தனியார் கம்பெனி ஒன்றியல் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஷீலா. இவர்களுக்க ஒரு மகள் உள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், சற்குணம், கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சற்குணம், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ஏற்றுமதி வளாகத்தின் எதிரில் உள்ள சிக்னல் பகுதிக்கு நேற்று இரவு தனது பைக்கில் சென்றார். அங்கு அவர், திடீரென நடுரோட்டில் தனது உடலில் பெட்ரோலை உடலில் ஊற்றி கொண்டு, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என கூச்சலிட்டபடி தீக்குளித்தார்.

இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் தீயை அணைத்து, அவரை மீட்டனர். பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!