பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால், அணையிலிருந்து வினாடிக்கு 7,350 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் 105 அடிக் கொண்டது. இதில் 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி, அப்பர், பவானி உள்ளிட்ட நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், பில்லூர் அணை நிரம்பியது. இதனையடுத்து பில்லூர் அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படுகிறது.
கொடநாடு, கூடலூர் ஆகிய இடங்களில் விடாது பெய்யும் கனமழை காரணமாக, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பவானி ஆறும் , மாயாறு அணையில் கலப்பதால், அணையின் நீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர தொடங்கியது. கடந்த ஜூலை 4 ஆம் தேதி 88 அடியாக இந்த நீர் மட்டம், அதே மாதம் 28-ம் தேதி 100 அடியை எட்டியது.
மேலும் படிக்க:உஷார் !! நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை.. 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்
இந்நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அணையானது 100 அடியை எட்டியதும், பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும். இருப்பினும், அணையில் கூடுதலாக நீரினைத் தேக்கும் வகையில், கடந்த மாதம் உபரி நீர் திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழை காரணமாக, முக்கிய அணைகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு வரும் நீரின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து, நீர் மட்டம் உயர தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதையடுத்து பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை முதல் உபரி நீர் திறக்கப்படுகிறது. காலை 11 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.31 டிஎம்சியாகவும் உள்ளது.
மேலும் படிக்க:மக்களே உஷார்.. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக உருவாகுமா..? வானிலை மையம் அறிவிப்பு..
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,359 கனஅடியும் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 7,350 கனஅடியாகவும் உள்ளது. பவானிசாகர் அணை விதிமுறைகளின்படி, அணையில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அக்டோபர் 31-ம் தேதி வரை 102 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம். தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதால், அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள ஒன்பது மதகுகளில் உபரி நீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும் போது, அணையின் மேல்மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்படும். இந்நிலையில் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் மற்றூம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பவானி ஆற்றில் குளிக்கவும் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:Watch : மேட்டூர் அணையின் அழகை காண வாரீர்! உயிரோட்டம் பெற்ற காவிரி ஆறு!!
இதே போல் தமிழகத்தில் மேட்டூர், வைகை உள்ளிட்ட முக்கிய அணைகள் நிரம்பியுள்ளது. காவிரி, வைகை, கொள்ளிட்டம் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.