
திருப்பூர்
பல்லடம் பேருந்து நிலையத்தில் வங்கி ஏடிஎம் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாரத மாணவர் பேரவை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பாரத மாணவர் பேரவை மாநில அமைப்பாளர் அண்ணாதுரை நேற்று மனு ஒன்றைக் கொடுத்தார்.
அந்த மனுவில், "பல்லடம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு 24 மணி நேரமும் பேருந்துகள் வந்துச் செல்கின்றன.
பல்லடம் பகுதியில் விசைத்தறி நெசவு உற்பத்திக் கூடங்கள், கறிக்கோழி பண்ணைகள், பின்னாலாடை துணி உற்பத்தி நிறுவனங்கள், கல்குவாரிகள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பல்லடம் பேருந்து நிலையப் பகுதியில் ஏடிஎம் வசதி இல்லாததால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, பல்லடம் பேருந்து நிலையத்தில் வங்கி ஏடிஎம் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.