வெளுத்து வாங்கும் வெயில்; கோடை தொடங்குவதற்குள் வாடும் மக்கள்; பழங்கள், இளநீர் ஜீஸ் விற்பனை அமோகம்...

First Published Mar 6, 2018, 9:48 AM IST
Highlights
before starting summer People suffered by sun Fruits coconut and juice sale


பெரம்பலூர்

பெரம்பலூரில் வெளுத்து வாங்கும் வெயிலின் தாக்கத்தால் வாடி வதங்கும் மக்கள் தர்ப்பூசணி, கரும்பு போன்ற பழங்களையும் இளநீர் மற்றும் ஜூஸ் வகைகளை தேடி தேடி சாப்பிடுவதால் அவற்றின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 

பெரம்பலூர் மாவட்டத்தில், இரவில் பனிப்பொழிவும், பகலில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இருப்பதால் வேலை நிமித்தமாக வெளியே செல்பவர்கள், பள்ளி - கல்லூரிக்குச் செல்லும் மாணவ - மாணவிகள், சொந்த விஷயமாக போக்குவரத்தினை மேற்கொள்பவர்கள் என அனைவரும் வெயிலின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். 

மேலும், இன்னும் கோடைகாலம் தொடங்க கூட இல்லை. அதற்குள் தொடக்கத்திலேயே இப்படி வெயில் வாட்டி எடுப்பதால், சித்திரை,வைகாசி மாதங்களில் வெயிலை எப்படி சமாளிப்பது? என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். 

இதனிடையே காலை பொழுதில் பனிமூட்டமாக இருப்பதால் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

இந்த நிலையில், கோடைக்காலத்தையொட்டி பெரம்பலூரில் தர்ப்பூசணி விற்பனை ஆங்காங்கே அமோகமாக நடந்து வருகிறது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நான்குரோடு, பாலக்கரை, துறைமங்கலம், வெங்கடேசபுரம், சங்குபேட்டை, பழைய பஸ்நிலையம், துறையூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டு இருக்கின்றன. 

வெயிலின் தாக்கத்தினை பொருட்படுத்தாது நடந்து செல்லும் மக்கள், மாணவ - மாணவிகள் ஆகியோர் தண்ணீர் தாகத்தினை போக்க தர்ப்பூசணியை தான் தேடி சென்று வாங்கி சுவைக்கின்றனர். 

தர்ப்பூசணி துண்டினை கடித்து சாப்பிட விருப்பப்படாதவர்கள் ஜூசாக வாங்கி குடிக்கின்றனர். அவற்றை வீடுகளுக்கும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

ஒரு கிலோ தர்ப்பூசணி (தரத்திற்கேற்றாற் போல்) - ரூ.12, ரூ.15, ரூ.18-க்கும், 1 பீஸ் - ரூ.10, ஜூசாக சாப்பிட 1 கப்- ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

விழுப்புரம் மாவட்டம் கோட்டிகுப்பம், கோவை, மதுரை, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து கொள்முதல் செய்து பெரம்பலூரில் விற்பதாக தர்பூசணி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தவிர சாலையோரங்களில் கரும்பு ஜூஸ், முலாம்பழம் ஜூஸ் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. கரும்பு ஜூஸ் ஒரு கப்-ரூ.15, ஐஸ் போட்ட ஜூஸ்-ரூ.10, முலாம் ஜூஸ் ஒரு கப்-ரூ.20-க்கும் விற்பனையாகிறது. 

உடலில் வெப்பத்தினை சீராக வைக்கவும், வறண்டு போன நாவிற்கு சுவையூட்டி குளிர்விக்கவும் இது போன்ற ஜூஸ் வகைகளை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி அருந்துகின்றனர். 

இதுபோல் இளநீர் கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டு விற்பனை நடக்கிறது. இளநீர் (அளவிற்கேற்றாற்போல்)- ரூ.25, ரூ.30, ரூ.35, ரூ.40-க்கும் செவ்விளநீர்-ரூ.35 லிருந்தும் விற்கப்படுகிறது. பழரசக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருப்பதை காண முடிகிறது.

கோடைக்காலத்தையொட்டி முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோரின் நலன் கருதி பேருந்து நிலையம், கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தண்ணீர்பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசாரின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு டிராபிக் சிக்னல் பகுதியில் தற்காலிக நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

click me!