
தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே. சுதர்சனம் வடமாநில கொள்ளையர்களால் படுக்கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது 2005ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள பெரியபாளையத்தில் சுதர்சனம் தனது குடும்பத்திருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கதை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த வட நாட்டு கொள்ளையர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைப் படுகொலை செய்தனர். தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகள்களை கொள்ளையர்கள் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். சுதர்சனத்தின் உடலில் 8 தோட்டாக்கள் பதித்திருந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை விசாரணையின் போது, இந்தக் கொலை பவாரியா கும்பலின் செயல் எனத் தெரியவந்தது.
ராஜஸ்தானைச் சேர்ந்த இந்தக் கும்பல், தென்னிந்தியாவில் தொடர் கொள்ளைகளுக்குப் பெயர் பெற்றது. இந்த கொலை தொடர்பாக கும்பலின் தலைவர் ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜகதீஸ்வரா உள்ளிட்ட 9 பேர் 2005இல் கைது செய்யப்பட்டனர். அப்போதைய காவல்துறை அதிகாரியான ஜாங்கிட் தலைமையிலான போலீசார் வடமாநிலம் சென்று இந்த கொள்ளை கும்பலை பிடித்தனர். பவாரியா கொள்ளையர்களில் 2 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். மேலும் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட இருவர் சிறையிலேயே உயிரிழந்தனர்.
சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மிகவும் தாமதமான விசாரணையால் வழக்கு முடிவுக்கு வரவில்லை. இதனால் 2021ம் ஆண்டு வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை முழுவதுமாக முடிவடைந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பவாரியா கொள்ளையர்களுக்கு என்ன தண்டனை?
அதாவது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனத்தை கொலை செய்த வழக்கில் ராகேஷ், அசோக், ஜெகதீஷ் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 24ம் தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது. பவாரியா கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தமிழில் வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.