
விழுப்புரத்தில், நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
டெல்லியில் விவசாயிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய மற்றும் மாநில நதிகளை இணைக்க வேண்டும் என்பன போன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தை நடத்துகின்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அதனை ஆதரித்து, இளைஞர்கள், மாணவர்கள் என மீண்டும் தமிழகத்தின் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முயன்றனர். ஆனால், காவல்துறையினர் போராட்டத்தை நடத்த விடாமலும், கூட்டம் கூடினால் கைதும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்., டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நேற்று காலை விழுப்புரம் நகராட்சி திடலில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் முருகையன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், “தேசிய, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை விவசாய வேலைக்கு பயன்படுத்த வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் ஜெயகோடி, புருஷோத்தமன், ரமேஷ், கலியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.