
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்ததையடுத்து அதை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய பிரமாண்ட போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்த போராட்டத்தைப் பார்த்து மிரண்டு போன மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சிறப்புச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிடீந்த தடையை நீக்கி உத்தரவிட்டன.
இந்த அறப்போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு தடை தவிர, வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர் பானங்களின் விற்பனை சரியத் தொடங்கியது. ஏராளமானோர் வெளிநாட்டு குளிர்பானங்களை புறக்கணிக்கத் தொடங்கினர்.
அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்களும் மார்ச் 1 ஆம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என அறிவித்தனர்.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழநாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பைச் சேர்ந்த விக்கிரம ராஜா, வரும் 14 ஆம் தேதியன்று அதாவது நாளை தமிழகம் முழுவதும், வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும் மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட பானங்கள் விற்பனை செய்வதில்லை என்ற கொள்கையில் உறுதியுடன் உள்ளதாகவும், மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.