கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் 9 பேருக்கு ஜாமீன் - உயர்நீதிமன்றம் உத்தரவு!!

First Published Aug 8, 2017, 11:26 AM IST
Highlights
bail for 9 kathiramangalam protestors


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் பெட்ரோல் - கேஸ் எடுக்கப்படுகிறது.

இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால், அதனை தடுப்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதைதொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ராட்சத இயந்திரங்கள் மூலம் புதிய விரிவாக்க பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி 1000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஓஎன்ஜிசி நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசியரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடையடைப்பு, உண்ணாவிரதம் என பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மேலும் ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும். 10 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை போலீசார் திரும்பப் பெற வேண்டும். அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

இதற்கிடையில், பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரையும் ஜாமீனில் விடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் பேராசிரியர் ஜெயராமனுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சிறையில் உள்ள 9 பேரை, ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், 9 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

click me!