
திண்டுக்கல்லில் மாயமான ஒன்றரை வயது பெண் குழந்தை குடிநீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டி, மீனாட்சிபுரத்தில் வசிப்பவர் கூலித்தொழிலாளியாக இருப்பவர் பால்பாண்டி.
இவரின் ஒன்றரை வயதுள்ள மகள் நேசிகா நேற்று இரவு திடீரென்று காணாமல் போயுள்ளார்.
பால்பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனாலும், நேசிகாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர், நேசிகா காணாதது குறித்து, பட்டிவீரன்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் பால்பாண்டி புகார் செய்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து போலீசாரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இரவு 2 மணியளவில் காணாமல் போன நேசிகா, மச்சராஜ் என்பவரது வீட்டில் இருந்த குடிநீர் தொட்டியில் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேல், அதிகாலையில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது பால்பாண்டியின் உறவினர் முத்துப்பாண்டியின் மகன் சுதர்சன் (11) நேசிகாவுடன் விளையாடியபோது குடிநீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக தெரியவந்தது.
நேசிகா - சுதர்சன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தொட்டியில் விழுந்து இறந்ததா? அல்லது திட்டமிட்டு நேசிகா கொலை செய்யப்பட்டாரா? என்ற வகையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.