ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களை மிரட்டும் அபே, மகேந்திரா ஆட்டோ ஓட்டுநர்கள்…

First Published Dec 14, 2016, 11:04 AM IST
Highlights


விழுப்புரம்:

விழுப்புரத்தில், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தும் இடத்தில் இருந்து, மிரட்டி வலுகட்டாயமாக வெளியேற்றிய அபே மற்றும் மகேந்திரா ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

விழுப்புரம் நகர மூன்று சக்கர ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கண்ணன் தலைமையில், நிர்வாகிகள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், “கடந்த 15 ஆண்டுகளாக விழுப்புரம் நகர எல்லையில், ஷேர் ஆட்டோக்கள் இயக்கி வருகிறோம். வட்டார போக்குவரத்து அதிகாரியின் அனுமதியுடன், புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள இடத்தை, நாங்கள் பயன்படுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வந்தோம்.

இந்த நிலையில், அபே மற்றும் மகேந்திரா ஆட்டோ ஓட்டுநர்கள், எங்களை மிரட்டி வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, தனி நபர் கட்டணமாக வசூல் செய்து கொண்டு, அனுமதிக்கு புறம்பாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே, ஷேர் ஆட்டோவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டு, மீண்டும் எங்களுக்கு வழங்கவும், முறைகேடாக இயக்கப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

click me!