
உளுந்துார்பேட்டை:
திருவெண்ணெய்நல்லுார் அருகே அரசு விரைவு பேறுந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 19 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திருச்சி அடுத்த துறையூரைச் சேர்ந்தவர் சையத்தஸ்தகீர் (45). இவர் ஒரு ஓட்டுநர். அரசு விரைவு பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றார்.
உளுந்துார்பேட்டை தாலுகா இருவேல்பட்டு அருகே செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணிக்கு பேருந்து சென்றபோது, சாலையின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.
பேருந்தில் பயணித்த மாற்று ஓட்டுநர் சரவணன், பயணிகள் ஞானசேகர் (52), சத்தியமூர்த்தி (42), கந்தன் (51), ராஜலட்சுமி (38), தமிழ்செல்வம் (19), பாலமுருகன் (22), ராஜேந்திரன் (35) உள்ளிட்ட 19 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொண்டுச் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லுார் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.