
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி, மேளதாளத்துடன் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சார்பில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை ஊர்வலத்துக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் க.செந்தில் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சா.சரவணன் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள், பள்ளியில் சேர்க்கும் வயதுள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்ப்போம் என கூறி கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பாண்டுரங்கன், முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் மற்றும் கிராம உறுப்பினர்கள், பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, வெள்ளைக் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியை பா.சுடர்கொடி தலைமை தாங்கினார். அவரது தலைமையில் மாணவர்கள் ஊர்வலம் நடைப்பெற்றது.
இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து, தலையில் கிரீடம் சூட்டி, மேளதாளத்துடன் அவர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருக்கள் வழியாகவும் இந்த ஊர்வலம் சென்றது.
இந்நிகழ்ச்சியில் கிராம மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் புதிதாக 10 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.