
திருவள்ளூர்
டிடிவி.தினகரனுடன் எவ்வித தொடர்பும் இல்லை என எழுத்துப் பூர்வமாக தந்தாலே போதும் இரு அணிகளும் 24 மணிநேரத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து விடும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் நேற்று தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள தனியார் மண்டபத்தில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில், கே.பாண்டியராஜன் பங்கேற்ருப் பேசினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“அதிமுக இரு அணிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்றால், இரு நிபந்தனைகளை மட்டும் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், அடுத்த 24 மணி நேரத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தி இரு அணிகளும் இணைந்துவிடும்.
கடந்த மாதம் 17-ஆம் தேதியிலிருந்து டிடிவி.தினகரனுடன் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனை எழுத்துப் பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினாலே போதும். இரு அணிகளும் இணைவதற்கு இணக்கமான சூழல் ஏற்படும்.
வரும் 14-ஆம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவோம்.
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எங்களிடம் ஆதரவு கேட்டால், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
தினகரன் விதித்த 60 நாள்கள் கெடு எங்கள் அணிக்கு கிடையாது.
சில எம்எல்ஏக்கள் காலையில் தினகரனையும், மாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்துள்ளனர். எனவே, அந்த எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர் என கருத்தில் கொள்ள முடியாது” என்று கூறினார்.