சாராயக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்; போலீஸ் பாதுகாப்போடு சாராயக் கடை திறந்து சரக்கு சப்ளை…

 
Published : Jun 07, 2017, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
சாராயக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்; போலீஸ் பாதுகாப்போடு சாராயக் கடை திறந்து சரக்கு சப்ளை…

சுருக்கம்

Women struggle to close the liquor shop but shop is Opened with police protection

வேலூர்

வேலூரில் டாஸ்மாக் சாராயக் கடையை மூட வேண்டும் என்று பெண்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் முப்பதுக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்போடு டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டு குடிகாரர்களுக்கு சரக்குகள் சப்ளை செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம், பனப்பாக்கம், ஓச்சேரி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் சாராயக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டதால் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த குடிகாரர்கள் ஓச்சேரியை அடுத்த பெரும்புலிபாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் சாராயக் கடைக்குச் சென்று தினமும் குடித்துவிட்டு வருகின்றனர்.

இதனால் பெரும்புலிபாக்கம் டாஸ்மாக் சாராயக் கடையில் தினமும் குடிகாரர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், அப்பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மாலை நேரத்தில் அவ்வழியாக செல்லும் பெண்கள் டாஸ்மாக் சாராயக் கடையை கடந்து செல்ல முடியாமல் பயத்தோடு அந்தப்  பகுதியை சுற்றிச் செல்கின்றனர்.

பெரும்புலிபாக்கம் சாராயக் கடைக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தாமல், பாலுசெட்டிச்சத்திரம், அம்பி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக குடிப்பதற்கு வருவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், சினம் கொண்ட பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு பெண்களும், மக்களும் என 300-க்கும் மேற்பட்டோர் நேற்று பகல் 11 மணியளவில் பெரும்புலிபாக்கத்தில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் டாஸ்மாக் சாராயக் கடையின் முன்பு அமர்ந்து சாராயக் கடையை இனி திறக்கக்கூடாது என முழக்கங்களை எழுப்பி குடிகாரர்களை அலறவிட்டனர்.

இதுபற்றி தகவலறிந்ததும், அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சேதுபதி, அவளூர் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நண்பகல் 12 மணியளவில் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்க வந்த ஊழியர்கள் சாராயக் கடையை திறக்க முடியாமல் தொலைவில் இருந்து போராட்டத்தை வேடிக்கைப் பார்த்தனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சேதுபதியை பெண்கள் சூழ்ந்துக் கொண்டு சரமாரியாக நறுக்குன்னு கேள்விகளை கேட்டனர்.

மதியம் 2 மணியளவில், இன்று ஒருநாள் டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்படாது என்று காவலாளர்களும், வருவாய்த்துறையினரும் கூறி டாஸ்மாக் சாராயக் கடை முன்பு அமர்ந்திருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.

அதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு மகளிர் குழு பெண்களும், மக்களும் கலைந்து சென்றனர்.

எனினும், டாஸ்மாக் ஊழியர்களும், காவலாளர்க்களும் அப்பகுதியில் காவலுக்கு நின்றனர்.

வீட்டுக்கு சென்றவுடன் மீண்டும் டாஸ்மாக் சாராயக் கடையை திறந்து விடுவார்கள் என்று கருதி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் சாராயக் கடை அருகே நின்றனர்.

இந்த நிலையில் மாலை 3 மணியளவில் டாஸ்மாக் கடைக்கு சாராய பாட்டில்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. டாஸ்மாக் சாராயக் கடையை திறந்து சரக்குகளை இறக்கினால் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறி காவலாளர்கள் அந்த லாரியை திருப்பி அனுப்பி விட்டனர்.

பின்னர், அரக்கோணம் டாஸ்மாக் சாராயக் கடை மேலாளர் பால்ராஜி சம்பவ இடத்துக்கு வந்து 30-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்போடு அந்த டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டது. அதனைப் பார்த்த குடிகாரர்கள் சாராயக் கடைக்கு வந்து போட்டிப்போட்டு சரக்குகளை வாங்கி குடித்துவிட்டு சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!