
வேலை வழங்காத ஆத்திரத்தால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியை ஜெனிஃபா மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை கூறியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை தலைவவராக பேராசிரியை ஜெனிஃபா பணியாற்றி வருகிறார்.
ஜெனிஃபா இன்று காலை வழக்கமாக பல்கலைக்கழகத்துக்கு சென்றார். கல்லூரி வளாகத்துக்குள் சுமார் 10 மணியளவில் அவர் நுழைந்தபோது, அங்கிருந்த மாணவர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு, ஜெனிபாவின் கழுத்தில் 3 முறை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்த மாணவர்கள், பேராசிரியரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெனிபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜெனிபரை கத்தியால் குத்திய அந்த நபரை, அருகில் இருந்த மாணவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெனிஃபா தாக்கப்பட்டது குறித்து காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை கூறுகையில், வேலை கொடுக்காத ஆத்திரத்தால், பேராசிரியை ஜெனிஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
சிகிச்சை பெற்று வரும் பேராசிரியை ஜெனிஃபா, தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பல்கலைக்கழகத்துக்குள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் துணை வேந்தர் கூறினார்.