
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, போயஸ் கார்டன் மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்து துர் சம்பவங்கள் நிகழ்வதால், ஜெயலலிதாவின் ஆவி துரத்துகிறதா? என்று பலரும் அச்சப்பட தொடங்கி உள்ளனர்.
ஜெயலலிதாவின் தாயார் உயிருடன் இருந்த பொது வாங்கிய போயஸ் கார்டன் வீடு, அவர் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு வந்தது. அதே வீட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
அதிமுகவின் பொது செயலாளர், தமிழக முதல்வர் என அவர் பொறுப்பு வகித்து வந்ததால், இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் அறிமுகமான அதிகார மையமாகவே, அவரது போயஸ் கார்டன் வீடு திகழ்ந்தது.
அத்துடன், அவர் அடிக்கடி கொடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வெடுக்க செல்வதால், அதுவும் இந்தியா முழுவதும் பிரபலமாகியது.
கொட நாடு எஸ்டேட் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றிலும் மின் வேலிகள் அமைக்கப்பட்டு, 1400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளது.
சென்னையிலிருந்து ஜெயலலிதா வந்திறங்குவதற்காக ஹெலிபேட் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பின் 100 உயர்மதிப்பு சொத்துக்களில், முதன்மை இடத்திலிருப்பது கொடநாடு எஸ்டேட்.
சொத்து குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து வருவாய் பறிமுதல் சட்டத்தின் கீழ் தமிழக அரசு இந்த சொத்துக்களை பறிமுதல் செய்யவுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவை அடுத்து, போயஸ் கார்டன் வீட்டை விடாமல் பற்றி கொண்டிருந்த சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று விட்டார்.
மகாதேவன் உள்ளிட்ட பல அகால மரணங்களும், வழக்குகளும் அவரது குடும்பத்தினரை துரத்திக் கொண்டே இருக்கின்றன. கட்சி மற்றும் ஆட்சியில், சசிகலா குடும்பத்தின் பிடி முற்றிலும் அகலும் நிலையும் வந்து விட்டது.
இந்த நேரத்தில், கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஓம் பகதூர், கிஷன் பகதூர் ஆகியோரை, இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியதில், சம்பவ இடத்திலேயே, ஓம் பகதூர் உயிரிழந்தார். மற்றொருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
காரில் வந்த மர்ம நபர்கள், அங்கிருக்கும் ஆவணங்களை திருட வந்திருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது. ஆனாலும், போயஸ் கார்டனோடு தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் இருப்பவர்களும் பாதிப்படையும் நிலை உருவாக்கி உள்ளதால், ஜெயலலிதாவின் ஆவி துரத்துகிறதா? என்றே பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
காவலாளியை கொன்ற மர்ம நபர்கள் யார் என்று கண்டு பிடிக்கப்படும் வரை, இந்த மர்மம் தொடரும் என்றே சொல்லப்படுகிறது.