
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் வங்கி ஏ.டி.எம். மையங்களில் திறக்கப்பட்ட பின்னும், பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்கக் காத்திருந்தனர். இதனால், மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால் ரூ.500 ரூ.1000 நோட்டுகள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றி வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.மையங்களில் பணம் விநியோகிக்கப்படவில்லை. இதனால் செலவிற்கு பணம் இல்லாமல் தவித்த பொதுமக்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை காலை முதலே வங்கி ஏ.டி.எம்.மையங்கள் முன்பு குவிந்தனர்.
தர்மபுரி நகரில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் பணம் எடுக்க காத்திருந்தனர். ஏ.டி.எம். மையங்களில் கணிசமான அளவில் பணம் நிரப்பப்பட்டது. இதனால் தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்தனர். பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் ரூ.100, ரூ.50 நோட்டுகள் மட்டுமே விநியோகத்தில் இருந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஞாயிற்றுக் கிழமை கூட செயல்பட்டன. வங்கிகளில் திரண்ட பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களிடம் இருந்த பணத்தை டெபாசிட் செய்தனர்.