“அரசு பணிக்கு ஆர்டர் வந்தாச்சு…” - 10 வருடத்திற்கு பின் மகிழ்ச்சியில் சாந்தி குடும்பம்

 
Published : Oct 18, 2016, 01:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
“அரசு பணிக்கு ஆர்டர் வந்தாச்சு…” - 10 வருடத்திற்கு பின் மகிழ்ச்சியில் சாந்தி குடும்பம்

சுருக்கம்

ஆசிய தடகள போட்டியில் சாதித்த தடகள வீராங்கனை சாந்திக்கு, அரசு வேலை கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்த தகவலால் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி. வறுமையில் வாடிய குடும்பத்தில் பிறந்த இவர் செங்கல் சூலைகளில் வேலை செய்து கொண்டே மாவட்ட அளவில் தொடங்கி மாநில, தேசிய அளவிலான தடகள போட்டிகளில் வென்றார்.

தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றி வாகை சூடிய இவர், கடந்த 2006ம்  ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு, தமிழக அரசு பரிசுகளை வழங்கியது. மேலும் அவருக்கு, பல நிறுவனங்களும் வேலை தருவதாக கூறியது.

பின்னர், உடல் தகுதி பிரச்சினையால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பதக்கமும் பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழக அரசு அப்போது அவருக்கு அளித்த ரொக்கமும், புதுக்கோட்டையில் தற்காலிக தடகளப் பயிற்சியாளர் பணியும் அவருக்கு ஆறுதல் அளித்தது.

பயிற்சியாளர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டுமென பலமுறை சாந்தி வலியுறுத்தியபோதும், அலுவலர்கள் தட்டிக்கழித்ததால் கடந்த்த 2010 ஜூலை 31ம் தேதி தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர், தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

இதை தொடர்ந்து, அரசியல் பிரமுகர் ஒருவரிடன் பரிந்துரைப்படி, பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (சாய்) பயிற்சி மையத்தில் தடகள போட்டி பயிற்சியாளருக்கான ஒரு வருட பட்டய படிப்பில் கடந்த 2013ம் ஆண்டு சேர்ந்தார்.

இதையடுத்து, கடந்த 2014 மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்கள் மயிலாடுதுறையில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதோடு, அங்கேயே ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சாந்தி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரை கடந்த 2014 டிசம்பர் 15ம் தேதியும், அடுத்த நாள், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை புதுடெல்லியிலும் சந்தித்து பறிக்கப்பட்ட பதக்கமும், நிரந்தர பயிற்சியாளர் பணியும் அளிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தார்.

ஆனால், சாந்தியிடம் இருந்து பறிக்கப்பட்ட பதக்கத்தை கொடுக்க இயலாதென்றும், அவருக்கு வேலை வாய்ப்பு அளிக்க இயலாதென்றும் மத்திய விளையாட்டு அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் வேலை கேட்டு விண்ணப்பம் அளித்து வந்த நிலையில் திடீரென நேற்று, அவரை தமிழக மனிதவள மேம்பாட்டு ஆணையத்தில் தடகள பயிற்சியாளராக பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து, சாந்தி கூறுகையில், எனக்கு பயிற்சியாளர் பணி கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்பிறகு தமிழக அமைச்சரின் உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு தங்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக, கூறினார்.

ஆனால் எந்த ஊரில் என்ன பணி என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. பணி ஆணை வந்த பிறகுதான் அது பற்றி தெரியும். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் எனக்கு வேலை கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்றார்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!