ஒரே நேரத்தில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் கர்ப்பம்; ஆறு பேருக்கும் வளைகாப்பு நடந்த அதிசயம்…

 
Published : Jan 30, 2017, 08:35 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ஒரே நேரத்தில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் கர்ப்பம்; ஆறு பேருக்கும் வளைகாப்பு நடந்த அதிசயம்…

சுருக்கம்

சேலம்

சேலத்தில் ஒரே நேரத்தில் தாய், மற்றும் ஐந்து பிள்ளை பசுக்கள் கருவுற்று இருந்ததால் அதன் உரிமையாளர் ஆறு பசுக்களுக்கும் வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி சுந்தர். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பசுவை வளர்த்து வந்தார். பின்னர், அந்த பசு அடுத்தடுத்து ஐந்து கன்றுகளை ஈன்றது. தற்போது அந்த 5 பசுக்களும் வளர்ந்து கர்ப்பம் அடைந்துள்ளன. மேலும், தாய் பசுவும் கர்ப்பம் தரித்தது. இதனால் இன்பத்தில் மூழ்கி ஆறு பசுமாடுகளுக்கும் வளைகாப்பு நடத்தி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடிவு செய்தனர் விவசாயி சுந்தர் மற்றும் குடும்பத்தினர்.

அதனை செயலிலும் செய்தனர். சேலம் சுகவனேசுவரர் கோவில் எதிரே உள்ள வாசவி சுபிக்‌ஷா அரங்கில் ஆறு பசுக்களுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று காலை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அனைத்து பசுக்களையும் குளிப்பாட்டி, மாலை அணிவித்து அழைத்து வந்தனர். பிறகு, தலைமுறைகளை உருவாக்கிய முதல் பசுவை வரவழைத்து அதற்கு அர்ச்சகர்கள் மூலம் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

பின்னர், வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண்களுக்கு வைப்பதுபோல், சந்தனம், குங்குமம், மஞ்சள், புதுப்புடவை, அலங்கார பொருட்கள் போன்றவை பசுவின் முன்பு வைக்கப்பட்டது. மீதமுள்ள 5 பசுக்களுக்கும் அவ்வாறே வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அந்த பசுக்களுக்கு 7 வகையான உணவுகள் மற்றும் பழங்கள் பரிமாறி வழங்கப்பட்டன. மேலும், பசுக்களின் கொம்பில் வளையல்களை கட்டியும், பூக்களை தூவியும் வளைகாப்பு நிகழ்ச்சியை பெண்கள் முன்னின்று நடத்தினர்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பசுக்களை வணங்கினர். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து விவசாயி சுந்தரின் குடும்பத்தினர் கூறுகையில், “பசுவை வணங்கினால் செல்வம் பெருக்கும். இவ்வாறு ஆறு பசுக்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்திருப்பது அதிசயமான ஒன்றாகவே பார்க்கிறோம். அவற்றை ஒன்றாக நிற்கவைத்து பெண்களை கொண்டு வளைகாப்பு விழாவை நடத்தியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றுத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!