
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழப்புகளுக்கான முதன்மைக் காரணம் மூச்சுத்திணறல் என மருத்துவக் கல்வி இயக்குநர் ராஜகுமாரி கூறியுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் நாட்டியே உலுக்கியுள்ளது. இது குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒருநபர் ஆணையத்தை அமைத்துள்ளது. அதன்படி ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ராஜகுமாரி கரூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்து கரூர் உயிரிழிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார்.
"கரூர் வேலுசாமிபுரம் சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. உடற்கூராய்வு அறிக்கையில், பெரும்பாலானவர்கள் இறப்பிற்குக் காரணம் மூச்சுத்திணறல் (Asphyxia) என உறுதியாகி உள்ளது."
"கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேரின் நிலைமை மட்டுமே கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்."
"உடற்கூறு ஆய்வுக்காக மட்டும் 16 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 60 முதல் 70 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுதவிர சேலம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார்கள்."
“கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.