விஜயகாந்தின் உடல் தீவு திடல் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக நேற்று தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு மாற்றாக தேமுதிக அலுவலகத்திலையே வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடலானது அவரது விருகம்பாக்கம் வீட்டில் சிறிது நேரம் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. காலை 11 மணி முதல் இன்று அதிகாலை வரை இலட்சக்கணக்கான தொண்டர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதில் ஒவ்வொரு மணி நேரமும் கூட்டமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று உடல் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் கூட்டமானது இன்னும் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியானது. பல மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையை நோக்கி படையெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் கடும் கூட்ட நெரிசலானது ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜயகாந்த் உடலானது தீவு திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது. இன்று மதியம் ஒரு மணி வரை பொதுமக்கள் மற்றும் முக்கிய விவிஐபிக்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு பிறகு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. மாலை 4:45 மணியளவில் தேமுதிக அலுவலகத்தில் உடலானது அடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்தநிலையில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த வளாகத்திலேயே வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எந்த இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது என இன்னும் முடிவு எடுக்கப்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்திற்கு நினைவு மண்டபம் கட்டும் வகையில் தேமுதிக அலுவலகத்திலேயே மற்றொரு வசதியான இடம் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.
இன்னும் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடம் தேர்வு செய்யப்படாத காரணத்தில் ஜேசிபி வாகனம் இன்னும் குழி தோண்டாமல் காத்திருக்கிறது. எனவே இன்னும் சிறிது நேரத்தில் புதிய இடம் தேரவு செய்யப்பட்டு குழி தோண்டப்படும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தேமுதிக அலுவலகத்தில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து மலர் மரியாதை செலுத்தினர். இந்த மலர் மாலைகளை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். இந்த குப்பைகள் மட்டும் 2 டன் அளவிற்கு அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.