சென்னை புறநகரில் உள்ள பரனூர், ஆத்தூர், திருச்சி –கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி, வேலூர் –விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள வல்லம், இனம் கரியாந்தல், தென்னமாதேவி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடியில் கட்டணம் இன்று இரவு முதல் உயர்கிறது.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி உள்ளது. சாலைகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை அந்த அந்த பகுதிகளில் உள்ள சங்கச்சாவடியின் பொறுப்பாகும், அந்த வகையில் வாகனங்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்.1ம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது.
கட்டணம் உயர்வு எவ்வளவு.?
ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து நுழைவு கட்டண உயர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், சுங்கச்சாவடி கட்டணமானது திங்கள்கிழமை ஜூன் 3ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படுகிறது.
மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுகிறது. தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது.