
கோயம்புத்தூர்
பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டு மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 68 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
“வனக் கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டு மின் இணைப்பு வழங்க வேண்டும்.
பழங்குடியின மக்கள் பட்டியில் இருந்து எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்பட்ட புலையன் இன மக்களை மீண்டும் பழங்குடியின நல ஆராய்ச்சி மைய உத்தரவின்படி எஸ்.டி. பழங்குடியின மக்கள் பட்டியலில் இணைக்க வேண்டும்.
இந்தியாவில் வன உரிமைச் சட்டம் 2006–யை பல மாநிலங்களில் அமுல்படுத்தி 16.43 ஏக்கர் நில பட்டா வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் உடனடியாக பழங்குடி மக்களுக்கு அனுபவ நிலப்பட்டா வழங்கவும், பட்டா வழங்க மறுக்கும் தடை ஆணையை உடனடியாக நீக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நிவாரணம் வழங்கவும்,
100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக அறிவிப்பதோடு ரூ.400 ஆக கூலி வழங்கவும், இந்த திட்டத்தை அனைத்து பேரூராட்சிகளிலும் விரிவுப்படுத்த வேண்டும்.
தென்னைச் சார்ந்தத் தொழிற்சாலைகளை ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் அமைக்க வேண்டும்.
விவசாய இடுப் பொருட்களுக்கு சரக்கு, சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கவும், நீர்நிலைகள் மாசுபடாமல் பாதுகாப்பதோடு, சாக்கடை நீர், சாயகழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பயிர்காப்பீட்டு திட்டத்தை வங்கி உள்பட தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்காமல் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு காவலாளர்கள் அனுமதி மறுத்ததையடுத்து அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்டத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.
ஆனைமலை ஒன்றிய தலைவர் அம்மாசை, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆனைமலை ஒன்றிய செயலாளர் துரைசாமி, பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மகாலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க கோவை மாவட்ட பொதுச்செயலாளர் திருமலைசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளேச் செல்ல முயற்சித்தபோது அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.
அப்போது காவலாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் போராட்டக்காரர்கள் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் 30 பெண்கள் உள்பட 68 பேரை காவலாளர்காள் அதிரடியாக கைது செய்தனர்.