
பெரம்பலூர்
பெரம்பலூரில் திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் கடத்திய பயன்படுத்திய 11 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். 11 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூர் பகுதியில் அரசு அனுமதியின்றியும், வருவாய் துறையினர் மறைமுக ஆதரவோடும் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
அந்த புகாரின்பேரில் பெரம்பலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் உத்தரவின் பேரில் மங்களமேடு துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்பட 10-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் நேற்று முன்தினம் இரவு லெப்பைக்குடிக்காடு, திருமாந்துறை, அத்தியூர், ஆடுதுறை பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அத்தியூர், லெப்பைக்குடிக்காடு வெள்ளாற்றங்கரையில் அரசு அனுமதியின்றி 10-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றப்பட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து மங்களமேடு காவலாளர்கள் அத்தியூர் பகுதியில் ஒன்பது மாட்டு வண்டிகளையும், லெப்பைக்குடிக்காடு பகுதியில் இரண்டு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், அத்தியூர் குடிக்காட்டைச் சேர்ந்த பழனிவேல் (48), ஆசைத்தம்பி (34), அத்தியூரைச் சேர்ந்த முத்துலிங்கம் (52), சுப்பிரமணி (48), ராஜேந்திரன் (61), முருகேசன் (38), பால்ராஜ் (46), தனபால் (32), பிச்சைப்பிள்ளை (40), லெப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் (24), செந்தில்குமார் (41) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.