Army Helicopter Clash:ஹெலிகாப்டர் விபத்தில் உதவிய நஞ்சப்பச் சத்திர மக்கள்.. அரசு செய்த அதிரடி ..

By Thanalakshmi VFirst Published Dec 15, 2021, 7:07 PM IST
Highlights

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்பசத்திர கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ2.5 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது, அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் பல்வேறு உதவிகளை செய்தனர். அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தென் பிராந்திய தலைமை அதிகாரி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிலையில், அந்த கிராமத்தில் நடைபாதை வசதி, தடுப்பு சுவர் அமைத்தல், பழுதான வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக இந்திய விமான படை அறிவித்தது.இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை முதலில் பார்த்த நஞ்சப்பச் சத்திரம் பகுதி மக்கள், தங்களால் முடிந்த அனைத்து மீட்பு பணிகளையும் செய்தனர். மேலும் உடனடியாக காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களுடன் சேர்த்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். தமிழக அரசு சார்பிலும் அனைத்து உதவிகளும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது. 

பின்னர், இந்த விபத்தின்போது மீட்புப்பணியில் உடனடியாகவும், நீடித்த அளவிலும் உதவிகளை அளித்ததற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்தது. துயரகரமான ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப்பணிகளிலும், காயம்பட்டவர்களை காப்பாற்றும் பணிகளிலும் உதவியதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், கிராம மக்களுக்கும் விமானப்படை நன்றி தெரிவித்தது. 

மேலும் அப்பகுதி மக்களுக்கு ராணுவம் சார்பில் உணவுப் பொருட்கள் மற்றும் கம்பளி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மிகவும் இக்கட்டான தருணத்தில் நஞ்சப்ப சத்திரம் மக்களின் உதவியை ராணுவம் மறக்காது எனவும் உங்களுக்கு ராணுவம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் மிக உருக்கமாக தென்பிராந்திய தலைமை அதிகாரி தெரிவித்ததார். உங்களின் உதவி, நாட்டைக் காக்கும் எங்களுக்கு ஊக்கமும், தைரியத்தையும் அளிக்கிறது என்றும்  இந்த உதவிக்கு ராணுவம் சார்பில் உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

உங்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை, ஒவ்வொரு மாதமும் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று கூறினார். மேலும் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் வந்து, உங்களைப் பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்கள். மருந்துகள் அளிக்கவும் பரிசீலிக்கப்படும் என்றார். 

மேலும் ராணுவம் சார்பில் குழந்தைகளின் நலனுக்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். பின்னர், விபத்து குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த அந்த கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மற்றும் சந்திரகுமாருக்கு தலா ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த கிராமத்தில் நடைபாதை வசதி, தடுப்பு சுவர் அமைத்தல், பழுதான வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

click me!