
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் வியாழக்கிழமை கைதாகியுள்ளனர். இவர்கள் மூவரும் பாஜக, அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கில் திமுக நிர்வாகி ஒருவரது மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். திமுக வழக்கறிஞர் அருளுடன் மலர்க்கொடி தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கி பரிவர்த்தனைகளை பார்வையிட்டபோது அவர்களுக்கு இடையேயான தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஒரு வாரமாக ஸ்ரீனிவாசன், சுதீஷ் , நரேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷைக் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து உள்ளது.