அரிகொம்பன் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த செக்யூரிட்டி ஊழியர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரி கொம்பன் அட்டகாசம்
வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகள், விடுதிகள் கட்டுப்பட்டுள்ளதால் யானையின் வழித்தடம் இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது வழி தடத்தை தேடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் 18க்கும் மேற்பட்டோரை கொன்று மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரிகொம்பன் ஒற்றை காட்டு யானையை கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடித்தனர். இதனையடுத்து அரி கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க யானையின் கழுத்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தி தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர்.
ஊருக்குள் புகுந்த அரிகொம்பன்
இதனைடுத்து யானை செல்லும் பகுதியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பெரியார் புலிகள் வன சரணாலயம் பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த அரிகொம்பன் யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது. கடந்த 4 தினங்களுக்கு முன்பாக ரோஜா பூ கண்டம் வழியாக லோயர்கேம்ப் பகுதிக்கு இடம்பெயர்ந்த யானை கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து விவசாயப்பயிர்களை அழித்து அங்கேயே தஞ்சம் அடைந்து நின்றுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பதற்றமான நிலை உருவானது. இதனையடுத்து அங்கு வந்த தமிழக மற்றும் கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களையும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களையும் செல்லவிடாமல் அங்கு பணியில் இருந்த பணியாளர்களை வெளியேற்றியிருந்தனர்.
யானை தாக்கி காவலாளி பலி
அரிகொம்பன் யானை தமிழக எல்லைப் பகுதியான கூடலூர் கம்பம் பகுதியில் நுழைந்து தற்போது சண்முகநதி அணைப்பகுதியில் நின்றுள்ளது. மேலும் அருகாமையில் உள்ள கிராமப்பகுதியில் நுழைந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் தீவிரக்கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விளை நிலங்களுக்குள் புகுந்த அரிகொம்பன் யானை அங்கேயே நின்றிருப்பது விவசாயிகளிடம் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி அன்று அதிகாலையில் கம்பம் நகருக்குள் புகுந்த அரிகொம்பன் ஒற்றைக் காட்டு யானை கம்பம் கூலத்தெருவில் புகுந்து பொதுமக்களை விரட்டியது. அப்போது தனியார் செக்யூரிட்டியாக பணிசெய்து வந்த பால்ராஜ் என்பவர் இரவு பணிமுடிந்து காலை வீட்டிற்கு திரும்பியபோது யானை தள்ளிவிட்டதில் பால்ராஜ் (வயது 65) என்பவர் தலையில் பலத்தகாயங்கள் ஏற்பட்டது.
அரி கொம்பனை பிடிக்கும் பணி தீவிரம்
இதனையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த இரண்டு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைப்பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாக இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யானை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனையடுத்து 3 கும்கி யானை உதவியோடு அரிகொம்பனை மீண்டும் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படியுங்கள்
அன்போடு நேரில் அழைத்த ஸ்டாலின்.. ஜூன் 15ல் சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..!