
கீழடி அகழ்வாராய்ச்சி பணியில் இருந்து தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மாற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.,
பண்டைய தமிழர் நாகரீகங்கள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு நடத்தும் திட்டமிட்ட சதி என்று பொதுவெளியில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகளை கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுடன் நிர்மலா சீதாராமன் அண்மையில் பார்வையிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்விவகாரத்தில் மத்திய அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது.அதிகாரிகள் பணியிடமாற்றம் என்பது வழக்கமான ஒன்றுதான். பதவிக்காலம் முடிந்ததாலேயே தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மாற்றப்பட்டார். அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து அறிக்கை அளிக்காததால் நிதி ஒதுக்க தாமதம் ஏற்பட்டது." இவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிலையில் கீழடிடியில் 3 ஆம் கட்ட அகழாராய்ச்சிப் பணி இன்று காலை 10.30 மணிக்கு பூஜையுடன் தொடங்கியது. மத்திய தொல்பொருள் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொல்லியலாளர்கள் குழுவினருடன் பணியாளர்கள் 15 பேர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கீழடியில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் 5,350 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.