
முழுமையான தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை எனவும் விசாரணைக்கு பின் யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சொகுசு ஓட்டல் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு காரில் வந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார். அவரை பிடித்து வலுக்கட்டாயமாக போலீசார் கீழே இறக்கிவிட்டு விசாரணை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மணிகண்டனுக்கும் போலீசாருக்குமிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலேயே மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் திருவான்மியூர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் விஜயக்குமார் என்பவர் தான் பலமாக தாக்கியதாக தெரிகிறது. விரக்தியடைந்த ஓட்டுநர் மணிகண்டன் காரில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் தீக்காயங்களுடன் துடித்த மணிகண்டன் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசாரின் இந்த அராஜக போக்கை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தை கைவிடுமாறும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தகவலறிந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த காவல் ஆணையர் விஸ்வநாதன், சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர், முழுமையான தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை எனவும் விசாரணைக்கு பின் யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.