
சென்னை தரமணி அருகே சீட் பெல்ட் அணியாததால் தாக்குதலில் ஈடுபட்ட போலீசாரை கண்டித்து இளைஞர் ஒருவர் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ் விஜயக்குமார் என தகவல் தெரியவந்துள்ளது. இவர் திருவான்மியூர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சொகுசு ஓட்டல் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு காரில் வந்த இளைஞர் ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார். அவரை பிடித்து வலுக்கட்டாயமாக போலீசார் கீழே இறக்கிவிட்டு விசாரணை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபருக்கும் போலீசாருக்குமிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலேயே வாலிபரை தாக்கியுள்ளனர். இதில் விரக்தியடைந்த அந்த வாலிபர் காரில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் தீக்காயங்களுடன் துடித்த வாலிபரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் போலீசாரின் இந்த அராஜக போக்கை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தை கைவிடுமாறும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் வாடகை கார் ஓட்டி வந்த மணிகண்டன் என்பதும் அவரை தாக்கிய போலிஸ் விஜயக்குமார் என்பதும் தெரியவந்துள்ளது.
தீக்குளித்த இளைஞர் மணிகண்டன் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் என்பதும் இவர் தாம்பரத்தில் தங்கி வாடகை கார் ஓட்டிவந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.