
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர்கள், வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் என அடுத்தடுத்து அமைச்சர்களின் வீடுகளில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வழங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
வருமானத்திற்கு அதிகமான சொத்து
இதனிடையே கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 - 2022 காலத்தில் கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது
வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே75 லட்சத்து78762 ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக வும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக வாங்கப்பட்டு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.
அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
இதன் அடிப்படையில் அம்மன் அர்ஜூனன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை 6.30 மணி அளவில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வலது கரமாக பார்க்கப்படும் அம்மன் அர்ஜூனன் வீட்டில் நடைபெற்று வரும் சோதனையால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.