அதிமுகவுடன் கூட்டணி என்றால் ராஜினாமா? பாஜக மேலிடத்திடம் அண்ணாமலை திட்டவட்டம்!

By Manikanda Prabu  |  First Published Oct 3, 2023, 5:24 PM IST

அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக பாஜக தலைமையிடம் அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


தமிழக பாஜக உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, கூட்டணியை பலப்படுத்துவதுடன், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் அக்கட்சி மேலிடம் முயற்சித்து வரும் நிலையில், திடீர் திருப்பமாக, பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டுள்ளது.

இந்த கூட்டணி முறிவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே காரணம் எனவும் அக்கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அண்மைக்காலமாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதன் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

Latest Videos

undefined

இந்த சூழ்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். என் மண் என் மக்கள் நடைபயணம் பற்றி ரிப்போர்ட் கொடுப்பதற்காக டெல்லி செல்கிறேன் என்று மழுப்பலாக அவர் கூறி விட்டு டெல்லிக்கு விமானம் ஏறினாலும், உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது என்கிறார்கள். தமிழக நிலவரம், அதிமுக கூட்டணி முறிவு குறித்து ஏற்கனவே நிர்மலா சீதாராமனிடம் விளக்கமான அறிக்கையை பெற்ற பின்னரே அண்ணாமலையை டெல்லி புறப்பட்டு வரச்சொல்லியுள்ளது பாஜக மேலிடம் என்கிறார்கள்.

உலகின் தலைசிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு!

அதன்படி, டெல்லி சென்ற அவரிடம் இனம்புரியாத பதற்றம் தொற்றிக் கொண்டிருந்ததை அவரது பேட்டியின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. தனது தலைவர் பதவியை பறித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் டெல்லி செல்லும் முன் பலமுறை தலைவர் பதவி பற்றியே பேசினார். தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றார். ஆனால், தலைவர் பதவி குறித்து கேட்ட பெண் செய்தியாளரை கடிந்து கொண்டார்.

டெல்லி போய் இறங்கியதுமே அவரை பாஜக மேலிடத் தலைவர்கள் உடனடியாக சந்திக்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருநாள் காத்திருப்புக்கு பின், நிர்மலா சீதாராமனை சந்தித்து அவரிடம் விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. நிர்மலா சீதாராமனிடம் அவர் என்ன சொன்னார் என்பதை கேட்ட பிறகே அவரை பாஜக டெல்லி தலைமை சந்துள்ளது. அண்ணாமலை கூறியதை தனது சீனியர்களிடம் தெரியப்படுத்தி விட்டு ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிர்மலா கோவை வந்து விட்டார். இதனிடையே, அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்த கர்நாடகாவை சேர்ந்த பி.எல்.சந்தோஷ் மாற்றப்பட்டு தமிழக பொறுப்பாளராக நிர்மலா சீதாராமனை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியை தொடர பாஜக மேலிடம் விரும்பினால் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பாஜக தலைமையிடம் அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமித் ஷா, கேபி நட்டா, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்த அண்ணாமலை, தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம். மேலும், அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர்களிடம் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

இதனை பாஜக தலைமை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனிடையே, தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு 8 மணிக்கு அண்ணாமலை சென்னை திரும்புகிறார்.

செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பதினைந்து நாட்கள் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதற்கு பிறகு, பல முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் பாஜகவின்  அனைத்து மட்டத்திலும் நடைபெறவுள்ளன. அதனடிப்படையில், அண்ணாமலை தலைமையில் பாஜகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அக்டோபர் 3ஆம் தேதி (இன்று) நடைபெறவிருந்தது. ஆனால், அது கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. அந்த கூட்டம் வருகிற 5ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறவுள்ளது. அதற்கு அண்ணாமலை தலைமை தாங்குவார் என தெரிகிறது.

click me!