செல்வப்பெருந்தகை ரவுடி என பேசி ஆதாரத்தை வெளியிட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு தொலைபேசி வாயிலாக தொடர்ப்பு கொண்டு நன்றி தெரிவித்ததாக அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை- ஜெயக்குமார் வார்த்தை மோதல்
தமிழகத்தில் அதிமுக- பாஜக நிர்வாகிக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. செல்வப்பெருந்தகையை அண்ணாமலை ரவுடி என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவரிடம் அண்ணாமலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என கூறினார். மேலும் லுங்கி அணிந்து கொண்டு நான் பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்னும் அவ்வளவு அவமரியாதை செயல் அல்ல என தெரிவித்தார்.
அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது - ஜெயக்குமார் விமர்சனம்
இந்த பேயை ஓட்டிவிட்டு அந்த பேய்க்கு வருகிறேன்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பல பேய்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த வேதாளம் வந்ததே பேய்களை ஓட்ட தான், தற்போது ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன், இந்த பேயை ஓட்டிவிட்டு அந்த பேய்க்கு வருகிறேன், இத்தனை பேய் இருப்பதால் ஒரே நேரத்தில் செல்ல முடியாது, ஒவ்வொரு பேயாக தான் சென்று வர முடியும், இந்த பேய்கள் எல்லாம் தமிழக மக்களை பிடித்த பீடைகள் போல், 70 ஆண்டுகாலமாக தமிழகத்தில் வளர்ச்சி இல்லை, வறுமை கோட்டிற்கு கீழே இருப்பதாக விமர்சித்தார்.
செல்வப்பெருந்தகை ரவுடியா இல்லையா.?
தொடர்ந்து பேசிய அண்ணாமலை. *நான் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை முன்னாள் ரவுடி என்பது சொன்னது பொய்யா இல்லையா.? அதற்கான தரவுகளை வெளியிட்டுள்ளேன், அவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்பது பொய்யா, இன்று முக்கியமாக காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு தொலைபேசி வாயிலாக இதனைப் பற்றி பேசியதற்கு நன்றி என கூறி வருகிறார்கள் என தெரிவித்தார்.
சாட்டை துரைமுருகன் கைது தொடர்பான கேள்விக்கு பதில அளித்த அவர், சாட்டை துரைமுருகனை அடிக்கடி கை செய்வது என்ன அர்த்தம், காவல்துறை இந்த வீரத்தை கூலிப்படை ரவுடிகள் மீது காட்ட வேண்டும், குறிப்பாக சாட்டை துறை முருகனை டார்கெட் செய்வது நல்லதல்ல மிகவும் அசிங்கமான ஒரு செயல் என அண்ணாமலை விமர்சித்தார்.