திருச்செந்தூர் கோயிலில் பக்தர் உயிரிழந்த சம்பவம் குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் சேகர்பாபுவின் விளக்கம் மற்றும் இறந்தவரின் மனைவி அளித்த கடிதத்தில் முரண்பாடுகள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Annamalai allegation : திருச்செந்தூர் முருகன் கோயில், ராமேஸ்வரம் கோயிலில் நெரிசலில் சிக்கி பக்தர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கடந்த 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம்குமார் என்பவர் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் மூச்சு திணறல் எற்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்திருந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழக்கவில்லையெனவும், ஏற்கனவே அந்த ஓம்குமார் என்பவருக்கு மூச்சு திணறல் பாதிப்பு இருந்ததாகவும், இதனையடுத்து தான் அவர் கோயில் பகுதியில் மயங்கி விழுந்ததாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அடுத்த அதிர்ச்சி!
கடிதத்தில் முரண்பாடுகள்
இதே கருத்தை தான் திருச்செந்தூர் கோயிலில் இறந்தவரின் மனைவியும் போலீசாரிடம் கடிதம் கொடுத்திருந்தார். ஆனால் இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் தான் இறந்தவரின் உடலை கொடுப்போம் என வற்புறுத்தப்பட்டதா.? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் கோவிலில், கூட்டநெரிசலால் உயிரிழந்த, காரைக்குடியைச் சேர்ந்த ஓம் குமார் அவர்களின் மனைவி எழுதியதாக, அமைச்சர் சேகர்பாபு கூறிய கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். அந்தக் கடிதத்தின் சில வரிகளை கோடிட்டுக் காட்டியுள்ளேன். இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் தான் இறந்தவரின் உடலைக் கொடுப்போம் என்ற வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடிதம் போல் உள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் பக்தர் உயிரிழப்பு - அமைச்சர் சேகர் பாபு புது விளக்கம்!!
10 லட்சம் ரூபாய் இழப்பீடு
மறைந்த திரு ஓம் குமாரின் குடும்பத்தார் மேலும், ஊடகத்தில், நேற்று அளித்த நேர்காணலைப் பார்த்தேன். கடிதத்தில் உள்ள விவரங்களுக்கும், அவர்கள் ஊடகத்தில் தெரிவித்ததற்கும் எத்தனை முரண்கள். தங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தை மறைக்க, பொதுமக்கள் உயிரை மலிவாக எண்ணும் அமைச்சர் சேகர் பாபு, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை உணர்ந்தால் நன்று. கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஓம் குமார் அவர்களின் குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என்றும், இனியும் கோவில்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.