தமிழகத்தை திமுக அரசு பின்னோக்கி இழுத்துச்செல்கிறது: 20ம் தேதி மாபெரும் போராட்டம் அண்ணாமலை அறிவிப்பு

By Velmurugan s  |  First Published Jan 11, 2025, 12:06 PM IST

மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக புதிய வழித்தடத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக மத்திய அரசு அத்திட்டத்தை கைவிட்டதைக் கண்டித்து திமுவுக்கு எதிராக 20ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. 

மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, நமது மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார்.

Tap to resize

Latest Videos

தமிழகத்தின் பல்வேறு ரயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே, திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, சமீபத்தில் நமது மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்கள் கூறியிருந்தார்.

அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது, ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.

திமுக அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் ஜனவரி 20, 2025 அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்தவிருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!