தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழா ரத்து தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்த நிலையில், அண்ணாமலை மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்
ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம், தஞ்சாவூர் உள்ளிட்ட சிவலாயங்களில் பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி விழா நடைபெறும். அதில், நடப்பாண்டு தஞ்சாவூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பரதநாட்டிய விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் வெளியில் அறிவிக்கப்படாத நிலையில், இதனை தமிழ்நாடு அரசுதான் ரத்து செய்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவுக்கு, இந்து மத விரோத திமுக அரசு அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு, நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறைதான்; தமிழ்நாடு அரசு அல்ல என விளக்கம் அளித்திருந்ததுடன், அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல எனவும் விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழா ரத்து தொடர்பாக திமுக அரசு மீது அண்ணாமலை மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டியாஞ்சலி விழாவைத் தடைசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, தனது இந்து மத விரோதச் செயல்பாடுகளுக்குத் துணையாக உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் திமுக அரசு தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற காரணம் கூறி, இருபதாண்டுகளாக ஆலய வளாகத்தில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்துவிட்டு, தற்போது தனது இந்து மத விரோதப் போக்கு பொதுமக்களுக்குத் தெரிய வந்ததும், இதற்கு சம்பந்தமே இல்லாத தொல்லியல்… https://t.co/WKF31I9n2B pic.twitter.com/yhvzhdoIfl
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k)
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற காரணம் கூறி, இருபதாண்டுகளாக ஆலய வளாகத்தில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்துவிட்டு, தற்போது தனது இந்து மத விரோதப் போக்கு பொதுமக்களுக்குத் தெரிய வந்ததும், இதற்கு சம்பந்தமே இல்லாத தொல்லியல் துறையின் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறது திமுக அரசு.
ஆலய வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவதற்கு அனுமதி மறுத்துவிட்டு, கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில் அவசரகதியில், தொல்லியல் துறைக்கு ஒரு கடிதம் எழுதி, அதற்குக் கிடைத்த பதில் கடிதத்தைக் காரணம் காட்டி, பழியை, தொல்லியல் துறையின் மீது போட்டிருப்பது, திமுக அரசின் வெட்கக்கேடான செயல்.
நாட்டியாஞ்சலி விழாவுக்கு, தொல்லியல் துறையின் அனுமதி பெறுவது தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறையின் கீழ் வரும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்தானே தவிர, தனியார் நிறுவனங்கள் நேரடியாகத் தொல்லியல் துறையிடம் அனுமதி கோருவது இல்லை. தமிழகம் முழுவதும் ஆலயங்களில், தனியார் நிறுவனங்கள், அறநிலையத் துறையின் உபயதாரராகவே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், உபயதாரர்கள் நடத்தும் நிகழ்ச்சிதானே தவிர, தனியார் நிகழ்ச்சி அல்ல. இதனை மறைத்து, புதிய கதை கூறியிருக்கிறது திமுகவின் உண்மை (?) கண்டறியும் குழு.
மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் வரும் தென்மண்டல கலாச்சார மையம், பிப்ரவரி 14, 2024 தேதியிட்ட கடிதத்தில், நாட்டியாஞ்சலி விழா நடத்துவது, திமுக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பொறுப்பு என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதோடு, நாட்டியாஞ்சலி விழா நடைபெறவிருக்கும் நாட்களில், தங்கள் சார்பில் எந்த நிகழ்ச்சிகளும் ஆலயத்தில் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
ஆனால், திமுக அரசு, 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவைத் தடைசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, தனது இந்து மத விரோதச் செயல்பாடுகளுக்குத் துணையாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது.
உலகெங்கும் உள்ள நாட்டியக் கலைஞர்கள், தங்கள் கலைத்திறனால் பெருவுடையாருக்கும், ராஜராஜசோழனுக்கும் மரியாதை செலுத்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, ஆலய வழிபாடு தொடர்பான நிகழ்ச்சி இல்லை என்று கூறுகிறதா திமுக அரசு? 2010 ஆம் ஆண்டு முதல், கடந்த 13 ஆண்டுகளாக, நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றபோது, சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதவில்லை என்பதில் இருந்தே தெரிகிறது திமுகவின் உண்மையான நோக்கம்.
தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
இருபதாண்டு காலமாக ஆலய வளாகத்தில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி விழாவினைத் தடை செய்தது முழுக்க முழுக்க திமுக அரசின் இந்து மத விரோதப் போக்கே தவிர, வேறொன்றுமில்லை.
திமுக அரசின் செய்தி தொடர்பு நிறுவனமாக பணிபுரியும் ஒரு கும்பல் தொடர்ச்சியாக தவறான செய்திகளை பரப்புவதை மட்டுமே முழு நேரமாக வைத்துள்ளனர். இதை திமுக சமூக ஊடகவியலாளர்கள் முழு நேர பணியாக செய்யும் போது இந்த பொய்களை பரப்பும் குழுவின் அவசியம் என்ன என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.” இவ்வாறு அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.