உயிர்களைக் காக்கவே மருத்துவர்...! அம்மருத்துவரையே கொல்வது பெருந்துயர்..! - நடிகர் பார்த்திபன்

First Published Sep 2, 2017, 11:23 AM IST
Highlights
Anita death - Parthiban mourning


மாணவி அனிதா தற்கொலை குறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர். அம்மருத்துவரையே கொல்வது பெருந்துயர் என்று கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குழுமூரை சேர்ந்த அனிதா கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவரது தந்தை சண்முகம் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக கஷ்டப்பட்டு படித்து வந்த அனிதா, நீட் என்ற அரக்கன் அனிதாவின் வாழ்வில் விளையாடி விட்டான். 

நீட் தேர்வை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் அனிதா மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். 

இதனால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் அனிதாவின் தற்கொலைக்கு வேதனை தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் தனது வருத்தங்களை பதிவு செய்துள்ளார். அதில்,

அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தார்க்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்து விட்டு நகர்தலும் வன்முறையே.

வாழவே துவங்காத ஓர் இளம் பெண், தன் இன்னுயிரை மாய்த்துக் கொ(ல்)ள்ளும் முன் என்னவெல்லாம் யோசித்திருக்கலாம்? அதில் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதே பிரதம கோரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அந்த நீள் கனவோடே அவரின் மீளா கண்ணடைத்தல் நிகழ்ந்திருத்தல் வேண்டும்.

ஏழைகளின் ஓலத்திற்கும் ஒப்பாரிக்கும் ஜி.எஸ்.டி. போட்டு விசும்பலாக்க, நடுவண் அரசு நன்கு அறிந்திருக்கிறதுதானே... செய்து கொண்டால்தானே அது தற்கொலை? ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்?

நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர். அம்மருத்துவரையே கொல்வது? பெருந்துயர்! இனி மறுதுர் - மறு தவற் நிகழுமுன் தடுக்க, இன்று கோர்க்கும் இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

click me!