
சிவகங்கை
சிவகங்கையில் ஒருமாதமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராம உள்ளது. இந்த கிராமத்தில் 600–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு அருகில் உள்ள கால்பிரவு விலக்கு வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒருபுறம் வறட்சியில் சிக்கியுள்ள மக்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மோட்டார் பழுதால் கீழமேல்குடி குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஒருமாத காலமாக குடிநீர் கிடைக்காமல் கீழமேல்குடி மக்கள் அவதியடைந்தனர்.
மேலும் தங்களது தண்ணீர் தேவைக்காக பல கி.மீ. நடந்துசென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். ஆனால், அதுவும் போதுமானதாக இல்லை. சில நேரங்களில் பல கி.மீ. சென்றும் தண்ணீர் கிடைக்காத அவலமும் ஏற்பட்டது.
நாள்தோறும் தனி மனிதன் ஒருவருக்கு 40 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தினந்தோறும் 3 லிட்டர் அளவு தண்ணீர் குடியுங்கள் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் கீழமேல்குடி மக்கள் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதற்கு சுகாதாரத்துறை என்ன விளக்கம் கொடுக்குமோ?
இந்த நிலையில் குடிநீர் விநியோகம் இல்லாததால் சினம் கொண்ட கீழமேல்குடி கிராமமக்கள் வெற்றுக் குடங்களுடன் மானாமதுரை ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் முற்றுகைப் போராட்டம் ஒரு மணி நேரமாக தொடர்ந்து நடந்தது.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, “குடிநீர் சீராக வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர்.
அதனையேற்று கிராம மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.