காலி பணியிடங்களை நிரப்பாததால் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்; பணிச்சுமையை தாங்க முடியவில்லையாம்...

First Published Jun 15, 2018, 8:39 AM IST
Highlights
Anganwadi workers strike because not fill empty vacancies Unable to bear the workload ...


புதுக்கோட்டை
 
புதுக்கோட்டையில் காலி பணியிடங்களை நிரப்பாததால் அங்கன்வாடி பணியாளர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவில்லை என்றால் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் கூடுதல் பொறுப்புகளை பார்ப்பதில்லை என்றும், மாவட்ட திட்ட அலுவலரிடம் அங்கன்வாடி மைய சாவி ஒப்படைக்கப்படும் என்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அறிவித்திருந்தனர். 

ஆனால், இதுவரை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கன்வாடி மையத்தின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பாததைக் கண்டித்தும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் முழங்கினர். 

இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "காலிப் பணியிடங்களை நிரப்பாததால் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. ஒரு பணியாளர் 3 அல்லது 4 மையங்களில் உள்ள பதிவேடுகளை பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பணிச்சுமை அதிகமாக உள்ளதால் பணியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஆட்சியர், திட்ட அலுவலரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே, உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். 

இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புஷ்பகலா அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  
 

click me!