தமிழகத்தில் பாதுகாப்பான இடம் என ஒன்று இல்லவே இல்லை.. திமுக அரசுக்கு எதிராக கொதிக்கும் அன்புமணி

Published : Nov 11, 2025, 02:13 PM IST
Anbumani

சுருக்கம்

இராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவரைக் கொலை செய்து நகை, பணம் கொள்ளையடிப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறிய திமுக அரசு ஆளும் தகுதியை இழந்து விட்டதாக அன்புமணி குற்றச்சாட்டு.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தை அடுத்த தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலின் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை கொடூரமான முறையில் படுகொலை செய்த கும்பல், அந்தக் கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணம் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளது. கோயில்களைக் கூட கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

தேவதானம் கோயிலில் கொள்ளையடிப்பதற்காக கொள்ளைக் கும்பல் வந்திருக்கலாம் என்றும், அவர்களின் கொள்ளை முயற்சிக்கு இரவுக் காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த படுகொலைகளுக்கும், நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டதற்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. திருச்சியில் நேற்று காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த ஒருவரை வன்முறை கும்பல் படுகொலை செய்தது. அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்குள் புகுந்து காவலர்களை கொள்ளையர்கள் படுகொலை செய்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம்... திமுக ஆட்சியில் எத்தகைய குற்றத்தையும் செய்யலாம்; அதற்காக எந்த தண்டனையும் தங்களுக்கு கிடைக்காது என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு ஏற்பட்டிருப்பது தான்.

தமிழ்நாட்டில் காவல்துறையின் தோல்விக்கு முழு முதல் காரணம் அத்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையால் இப்போதும் அதே திறனுடன் செயல்பட முடியும். ஆனால், திறமையான அதிகாரிகளை ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளாதது தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு காரணம் ஆகும்.

கொலை, கொள்ளைகளை தடுக்கத் தவறிய திமுக அரசு பெரிய அளவில் குற்றங்கள் நடைபெறும் போதெல்லாம், தங்களின் தோல்வியை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்ததாக புளித்துப் போன கதை - வசனத்துடன் கூடிய நாடகங்களை நடத்துகிறது.. இதையெல்லாம் நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. சட்டம் - ஒழுங்கைக் காக்கத் தவறிய திமுக அரசு, தமிழகத்தை ஆளும் தகுதியை இழந்து விட்டது. இதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் உறுதி செய்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!