
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
சம்பா சாகுபடிக்காக கடன் வாங்கி விதைத்த நெல் முளைக்காததால் மனம் உடைந்த விவசாயி கோவிந்தராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே கடன் தொல்லை, பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமை, விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதமும், நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலைநாட்களை 150 ஆக உயர்த்துவதுடன், தற்கொலை செய்து கொண்ட விவசாயி கோவிந்தராஜன் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.