'வெறும் ரூ.2,000 நிவாரணம்; வடமாவட்டங்களுக்கு துரோகம் செய்யும் திமுக'; அன்புமணி பாய்ச்சல்!

By Rayar r  |  First Published Dec 16, 2024, 6:15 PM IST

கனமழையால் பாதிக்கப்பட்ட வடமாவட்டங்களுக்கு திமுக துரோகம் செய்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


வெள்ள நிவாரண உதவி கேட்டு போராட்டம் நடத்தும் மக்களை ஒடுக்குமுறை மூலம் அடக்க நினைக்கும் அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழையாலும், சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் பொதுமக்கள் சாலைமறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். 

போராடும் மக்களின் கோரிக்கையை அறிந்து சரி செய்ய வேண்டிய அரசு, அவர்களை கைது செய்து ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது கண்டிக்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர், உப்புவேலூர், கிளியனூர், வடசிறுவலூர், ஆதவனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் பல இடங்களில் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்தச் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

அதேபோல், வடபுத்தூர் கிராமத்திலும் பெருமளவிலான பெண்கள் உள்ளிட்டோர் நிவாரண உதவி கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சன்னியாசிபேட்டை கிராமத்தில் நிவாரண உதவி கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து, அங்குள்ள மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 

இதனால், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மக்களின் குறைகளை கேட்டறிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கைது உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதை ஏற்க முடியாது.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்ட மக்களுக்கு அடுக்கடுக்காக துரோகம் இழைக்கப்படுகிறது. 

undefined

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண உதவி வழங்கப்பட்ட நிலையில், மழை மற்றும் சாத்தனூர் அணை திறப்பு என இரு வகையான பாதிப்புகளுக்கு உள்ளான இந்த மக்களுக்கு மட்டும் வெறும் ரூ.2000 நிவாரண உதவி வழங்குவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

அதுமட்டுமின்றி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வரும் நிலையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டும் தான் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் குறைந்தது 15 லட்சம் குடும்பங்கள் உள்ளன.

அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 355 குடும்பங்கள், கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 983 குடும்பங்கள் என 6 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும்தான் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களில் 40 விழுக்காட்டினருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. 

கடலூர் , விழுப்புரம் மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6000 வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும். அதற்கு மாறாக, அடக்குமுறைகளின் மூலம் பொதுமக்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று திராவிட மாடல் அரசு நினைத்தால் அதற்கு இந்த மாவட்ட மக்கள் கடுமையான பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

click me!