அடிமட்ட தொண்டர்களுக்கு தான் தவெகவில் பதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல் ஆளாக ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, இந்த முறை வாய்ப்பை கோட்டை விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. மேலும் பாஜக, பாமக, தேமுதிக, விசிக, நாம் தமிழர் கட்சிகளும் வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமுடன் உள்ளன. இது தவிர விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீது இந்த முறை அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திமுக வீழ்த்த தவெக அதிமுகவுடன் கூட்டணி சேருமா? விசிகவின் திருமாவளவன் விஜய்யுடன் கைகோர்ப்பாரா? என பலவித கருத்துகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. மேலும் விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜூனா தவெகவில் சேருவாரா? அப்படி சேர்ந்தால் அவருக்கு என்ன பதவி கிடைக்கும்? என பேச்சுகள் வைரலாக பரவுகின்றன.
இப்படி கருத்துகள் உலா வரும் நிலையில், சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டிய தொண்டருக்குதான் தவெகவில் பதவி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய புஸ்ஸி ஆனந்த், ''பல்வேறு கட்சிகளில் இருந்து வெளியே வருபவர்கள் நமது கட்சியில் இணைகின்றனர்.
undefined
நாம் அவர்களை மதிக்க வேண்டும்; அரவணைக்க வேண்டும். அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அன்று முதல் இன்று வரை சைக்கிளில் சென்று போஸ்டர் ஓட்டிய தொண்டர்களுக்குத் தான் தவெகவில் பதவி வழங்கப்படும் என தலைவர் விஜய் தொடர்ந்து சொல்லி வருகிறார். தலைவர் கூறியபடி கட்சியில் உழைப்பவர்களுக்கு தான் பதவி வழங்கப்படும்; உழைக்காதவர்களுக்கு பதவி கிடையாது.
நம்முடைய உயிர் மூச்சு நாடி அனைத்தும் தலைவர் தான். அவரின்றி வேறு ஏதும் கிடையாது. அவரை 2026ம் ஆண்டு ஆட்சியில் அமர வைப்பதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்காக நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்'' என்று தெரிவித்துள்ளார்.