உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் ஊழியர்கள் போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக கட்டணம் இன்றி வாகனங்கள் ஓசியாக பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊழியர்களின் பிரச்சனைக்கு திர்வுகாண வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. நாடு முழுவதும் தற்போது பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உளுந்தூர் பேட்டை சுங்ககச்சாவடியிலும் பாஸ்டேக் நடைமுறைக்கு வந்த நிலையில், அங்கு பணியாற்றும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையில் சுங்கச்சாவடி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக உளுந்தூர் பேட்டை டோல்கேட்டை கடந்து செல்லும் வாகனங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நடைமுறைகளோ, விதிகளோ கடைபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
பொய் வழக்கினால் பெண் தற்கொலை..! திமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும்- அண்ணாமலை ஆவேசம்
பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்
இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது! தொழிலாளர் நிரந்தரப்படுத்துதல் சட்டம் 1981ன் படி 2 ஆண்டுகளில் 48 நாட்கள் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அதன்படி 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 250 பேரும் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். அதை செய்வதற்கு பதிலாக பணி நீக்கம் செய்வது கண்டிக்கத்தக்கது! சட்டவிரோத பணிநீக்கத்தை கண்டித்தும், நீக்கப்பட்டதைக் கண்டித்தும் சுங்கச்சாவடிகளில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் நெடுஞ்சாலைகள் ஆணையமோ, மாவட்ட நிர்வாகமோ பேச்சு நடத்த முன்வராதது பெரும் அநீதி ஆகும்!
ஆட்குறைப்புக்கான எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் செய்யப்பட்டுள்ள இந்த பணி நீக்கத்தை தமிழக அரசு தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்குவதற்கும் சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
சட்டசபை கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஸ்க்கு எந்த வரிசையில் இடம்..? சபாநாயகர் அப்பாவுவின் புதிய தகவல்