மாணவியின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது..

By vinoth kumarFirst Published Jul 23, 2022, 9:02 AM IST
Highlights

தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ஆம்புலன்சின் முன் பகுதியில் ஏற்பட்ட சிறிய சேதம் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாகனம் புறப்பட்டது.
 

தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ஆம்புலன்சின் முன் பகுதியில் ஏற்பட்ட சிறிய சேதம் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாகனம் புறப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த  மாணவி ஶ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் திடீரென வன்முறை வெடித்தது. இதில், பள்ளி முற்றிலுமாக தீக்கறையானது. 

மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப்போதில்லை என பெற்றோர்கள் கூறி வந்தனர். ஆனால், மகளின் உடலை இன்று நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளா விட்டால் காவல் துறை சட்டப்படி இறுதி சடங்குகளை நடத்தும் என உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இதனையடுத்து, மாணவியின் தந்தை மகளின்  உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். பின்னர், வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து, போலீஸ் பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் மாணவியின் உடல் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஆம்புலன்ஸ் முன்பகுதி சேதமடைந்தது. அப்படி இருந்த போதிலும் ஆம்புலன்ஸ் வாகனம் சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டு சொந்த ஊருக்குக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, அந்த கிராமத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் பெரியநெசலூர் கிராமம், போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதை அடுத்து கிராமத்துக்குள் நுழையும் வாகனங்களின் எண், ஓட்டுநர் பெயர் எழுதப்பட்டு சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுகின்றன. 

click me!