ஆம்புலன்சுடன் மோதிய கார் 2 மாணவர்கள் பலி - பிறந்த நாளை கொண்டாட சென்னை வந்த போது சோகம்

First Published Nov 4, 2016, 2:35 AM IST
Highlights


சென்னையை அடுத்த திருவள்ளூரில் ஆம்புலன்சுடன் கார் நேருக்கு நேர் மோதியதில் ஆந்திர மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாயினர்.  நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாட வந்த போது நடந்த இந்த சோக சம்பம் பற்றிய விவரம் வருமாறு

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தவர் சிங் (20).  நேற்று முன்தினம் இவருக்கு பிறந்த நாள் என்பதால் அதனைக் கொண்டாடுவதற்காக இரவு 3 கார்களில் 15 மாணவர்கள் சென்னைக்கு ஜாலியாக புறப்பட்டனர்.

 முதல் காரில் மாணவர்கள் ஜெகதீஷ், அரிநாத், ஜோதி தருப், பிரணாப்ரெட்டி, சுதர்சனம், சிவசாய் கிருஷ்ணா ஆகியோர் இருந்தனர். மூன்றாவது காரில் பிறந்தநாள் கொண்டாடும் மாணவர் சிங் மற்றும் தனது நண்பர்களுடன் இருந்தார். 

இரவு 11 மணியளவில் கார், திருவள்ளூர் புதூர் என்ற இடத்தில் வந்த போது, எதிரே சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென எதிர்பாராத விதமாக காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் நிலைதடுமாறி சாலையிலிருந்து பள்ளத்துக்குள் பாய்ந்தது. 

இதில் காருக்குள் இருந்த மாணவர்களும், ஆம்புலன்ஸ் டிரைவர் திருத்தணியை சேர்ந்த முனிரத்னமும் பலத்த காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும், கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காருக்குள் ரத்த காயங்களுடன் சிக்கிக் கொண்டு இருந்த மாணவர்களையும், ஆம்புலன்ஸ் டிரைவர் முனிரத்னத்தையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மாணவர்கள் சுதர்சனம் (20), சிவசாய் கிருஷ்ணா (20) ஆகியோர் பலியாகினர். மேல் சிகிச்சைக்காக மற்ற மாணவர்களும், ஆம்புலன்ஸ் டிரைவர் முனிரத்னமும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் ஜெகதீஷ், அரிநாத், ஜோதி சருப், பிரணாப்ரெட்டி ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. 

click me!