
தூத்துக்குடியில் ஒரே நாளில் 35 ஆயிரத்து 656 மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து புதிதாக அமைக்கப்பட்ட என்.டி.பி.எல். அனல் மின் நிலையம் சாதனைப் படைத்துள்ளது.
இதுகுறித்து அனல் மின் நிலைய தலைமை செயல் அலுவலர் நீலகண்ட பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“என்.எல்.சி. நிறுவனத்தின் துணை நிறுவனமான தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அலகுகள் உள்ளன. மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி, கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தின் வடக்கு சரக்குக் கையாளும் முதல் தளத்தின் மூலமாக இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரி கடந்த 30ஆம் தேதி "எம்.வி. டென்டென்' என்ற கப்பலிலிருந்து ஒரே நாளில் மட்டும் 35 ஆயிரத்து 656 மெட்ரிக் டன் இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி "எம்.வி. ஜெ.எஸ். சனகா' என்ற கப்பலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 33 ஆயிரத்து 760 மெட்ரிக் டன் என்ற இலக்கு இப்போது முறியடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. புதிய சாதனை படைக்க முக்கிய காரணமாக இருந்த என்.டி.பி.எல். அதிகாரிகள், சரக்குக் கையாளும் இயந்திரப் பணியாளர்கள், பொறியாளர்கள், முகவர்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.