
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கையில் மருத்துவர்கள், ஊழியர்கள் தட்டுப்பாட்டால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பாளர் தலைமையில், உறைவிட மருத்துவ அலுவலர் உள்பட சுமார் 40 மருத்துவர்கள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாள்தோறும் 20முதல் 22 மருத்துவர்கள் மட்டுமே பணிக்கு வருகின்றனர். பொது பிரிவுக்கென தனி மருத்துவர் இல்லை. ஒருவர் மட்டும் ஒரு மாதமாக மாற்றுப் பணி மருத்துவர் என்ற முறையில் பணிபுரிந்து வருகிறார்.
மேலும், தோல் மருத்துவர், மனநல மருத்துவர், மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், நரம்பியல் மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் தற்போதுவரை நிரப்பப்படமாலேயே உள்ளது.
இங்கு 2 டயாலிஸிஸ் யூனிட் உள்ளது. அதற்கான மருத்துவர்கள் இல்லை. விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. இதற்கு போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததே காரணம் எனக் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குத் தேவையான சி-ஆர்ம் உபகரணங்கள் இல்லை. இதனாலேயே தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியும் இங்கு இல்லை.
நாள்தோறும் சுமார் 1,100 வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆனால், காலை 7.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரையும், மாலை 3 மணிமுதல் 5 மணி வரையும் மட்டுமே வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மகப்பேறு பிரிவில் 7 மருத்துவர்கள் இருந்து வந்த நிலையில், தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே பணிக்கு வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 12 பேர் பிரசவத்துக்கு வந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. போதிய மருத்துவர்கள் இல்லாமல் மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு, போதிய மருத்துவர்கள், இதர பணியாளர்களை பணியில் அமர்த்தி, உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் கூறியதாவது: “கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஆலைகளில், விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க இங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால் காலதாமதம், பணவிரயம், உயிர்ச்சேதம் ஏற்படுகின்றன. தீக்காயங்களுக்கு என தனியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அதற்கான உபகரணங்களையும் வழங்க வேண்டும்.
உள்நோயாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.