அம்பாசமுத்திரத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாகவும், போலீஸ் காவல் விசாரணையின் போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முதலில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் ராஜ்குமார், போகபூமன், சந்திரசேகரன், ராஜகுமாரி, ஏ.பெருமாள், என்.சக்தி நடராஜன், எம்.சந்தானகுமார், வி.மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ்-யை விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்தது. அவர் நடத்திய இரண்டாம் கட்ட விசாரணையின் பரிந்துரைப்படி, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அப்போதைய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். மாநில மனித உரிமை ஆணையமும் இது தொடர்பாக விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் வி.கே.புதூர் ஆகிய காவல் நிலையங்களில் நடந்த சித்திரவதை தொடர்பாக முதல் புகார் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி பதிவானது. புகார் பதிவு செய்யப்பட்டு 125 நாட்கள் ஆகியும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் பிற காவலர்களை, வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார் கைது செய்யவில்லை.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமாரின் புகாரின் அடிப்படையில், பல்வீர் சிங் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பிற காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், சிறார் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி போலீஸார் முதல் வழக்குப் பதிவு செய்தனர். அதன்பின்னர், பிற பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் மேலும் சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
ஆனாலும், ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் பிற காவலர்கள் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. ஏஎஸ்பி பல்வீர் சிங் மீதான வழக்கு விசாரணைக்கு அனுமதி வழங்குவதில் தமிழக அரசு காலதாமதம் செய்வதால், சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி மாநில அரசுக்கு சிபிசிஐடி போலீசார் கோரிக்கை அனுப்பியுள்ளதாகவும், குற்றப்பத்திரிகை கிட்டத்தட்ட தயாராக உள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
“குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் மீது 60 நாட்களுக்குள் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அருண்குமாரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து 73 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சிபிசிஐடி அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக சந்தேகிக்கிறோம்.” என ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.
வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கூட மாநில அரசு வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது ஷபீர் ஆலம் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஆகியோரின் விசாரணை அறிக்கைகளை மாநில அரசு ரகசியமாக வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழிகாட்டுதல் மனுவை விரைவில் தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.